3 மாத காலம் சமாதி நிலையில் இருந்து விட்டு கண்ணைத் திறந்துபார்த்தால் உலகமே மாறிவி்ட்டது என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்தார்.
3 மாதகாலம் சமாதி நிலையில் இருந்து விட்டு கண்ணைத் திறந்துபார்த்தால் உலகமே மாறிவி்ட்டது என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்தார்.
சுவாமி நித்யானந்தா என்றாலே சர்ச்சை என்ற பெயர் தானாகவே ஒட்டிக்கொள்ளும். அந்த அளவுக்கு கடந்த காலங்களில் சர்ச்சையில் சிக்கி பிரபலமாகினார். பெங்களூருவில் பிடதியில் ஆசிரமம் நடத்திய சுவாமி நித்யானந்தா. பாலியல் சர்ச்சை, பெண்களை வலுக்கட்டாயமாக மடத்தில் அடைத்து வைத்தல், மதுரை ஆதினத்தின் வாரிசு என பல்வேறு சர்ச்சைகளில் கடந்த காலங்களில் சிக்கினார்.

நித்யானந்தாவின் சர்ச்சைகள் எந்த அளவு பிரபலமோ அதுபோல் இவரின் பேச்சும், காமெடி கலந்த அறிவுரையும், மக்களிடையே பிரபலம். சமூக ஊடகங்களில் மீம்ஸ் போடுவதற்காக தனியாக நித்தியானந்தாவுக்கு ரசிகர் கூட்டம் உண்டு.
ஆனால் திடீரென கொரோனா காலத்துக்கு முன்பே தலைமறைவாகினார். கைலாசா என்ற தீவுக்கு வந்துவிட்டதாக கூறிய நித்யானந்தா தனிநாடு, தனி அரசு என கூறிவந்தார். கைலாவாவுக்கு வருபவர்களுக்கு தனி விசா, பாஸ்போர்ட், என்று கூறி தன்னை அதிபர் ரேஞ்சுக்கு பேசினார்.
கொரோனா காலத்தில் உலகமே கொரோனா பிடியில் இருந்தபோதும் அலுக்காமல் தனது பக்தர்களுக்கு சத்சங்கம் நடத்தி, காணொலி வெளியிட்டு வந்தார்.
ஆனால், கடந்த 3 மாதங்களாக நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. வெளிஉலகிற்கு அவர் எந்தவிதமான வீடியோ அப்டேட்டும் வழங்கவில்லை. நித்யானந்தா சமாதிநிலையை எட்டிவிட்டதாகவும், இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால், அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரு பூர்ணிமா நாளான நேற்று நித்தியானந்தா காணொலி வாயிலாக தனது பக்தர்களிடம் பேசினார். தனது பேச்சில் சமாதி நிலை குறித்தும், தான் முழுமையாக மாறிவிட்டதாகவும், இனிமேல் புதிதாக ஒருவரைப் பார்க்கப்போவதாகவும், பூஜையிலும் வித்தியாசமான முறையை பார்க்கப்போவதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.
நித்யானந்தா பேசுகையில் “ 3 மாதங்களாக நான் நித்திய சமாதி நிலையில் இருந்தேன். கண்ணைத் திறந்து பார்த்தபோது, உலகமே மாறிவிட்டது. இந்த 3 மாத காலத்தில் பரமசிவன் எனக்கு அளித்த ஞானம், ஆசி, அருள் ஆகியவற்றை உங்களுடன் பகிரப் போகிறேன்.

நாம் எல்லோரிடமும் அழியக்கூடிய சக்தி ஒன்று இருக்கிறது. ஆனால், அழிக்க முடியாத, முடிவு பெறாத சக்தி இருக்கிறது என்றால், அது சமாதி நிலைதான். அதுதான் ஆன்மா. அந்த ஆன்மாவில்தான் இறைவன் இருக்கிறார்.
இறைவனும் அழிவில்லாதவர், அழிவில்லாத ஒன்றின் மீது உங்களுக்கு ஈர்ப்பு வந்துவிட்டாலே இறைவன் வந்துவிடுவார். அதுதான் சமாதிநிலை. திருவண்ணாமலையில் இதுபோல் சமாதி நிலையை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இவ்வாறு நித்யானந்தா தெரிவித்தார்
