அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் நடந்த சந்திப்பு
வியாழக்கிழமை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகச் சென்றபோது, கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் ஒன்றாகப் பயணித்தார். பின்னர், ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டால், அது தனக்குப் சந்தோசம் தான் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கருத்து
இதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வத்தைப் போல செங்கோட்டையனும் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கட்சி தலைமைக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்தத் தயக்கமும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் பதில் என்ன?
தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.ஏ. செங்கோட்டையன், நாளை ஈரோட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளது. அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விரிவாகப் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுகவை ஒருங்கிணைக்க 10 நாட்கள் கெடு விதிப்பதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் மறுநாளே அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆனால், அடிப்படை உறுப்பினராகவே நீடித்தார்.
பின்னர், டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்த அவர், கட்சியை ஒருங்கிணைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், இணக்கமாக செயல்படத் தொடங்கினார். கடந்த வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், கட்சித் தலைமைக்கு தான் கெடு ஏதும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
