திருவாரூர்

திருவாரூரில் அதிமுக அம்மா அணியினர் வைத்திருந்த விளம்பர பதாகைகள் கிழிக்கப்பட்டதால் டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசின் சார்பில் வரும் 19-ஆம் தேதி திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான விளம்பர பதாகைகளை அதிமுக அம்மா அணி (எடப்பாடி பழனிசாமி அணியினர்) மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் வைத்தனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாட்டம், 7 மற்றும் 24-வது வார்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் கிழித்துச் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் அதிமுக அம்மா அணி நகரச் செயலர் ஏ.டி. மாதவன் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில், காவலாளர்கள் வழக்குப் பதிந்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான நெடுவாக்கோட்டை ஐயா ஆறுமுகம் (50) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், வி.திவாகரனின் ஆதரவாளரும், அண்மையில் அதிமுக அம்மா அணியில் கட்சியின் மாநில அமைப்புச் செயலராக, டி.டி.வி.தினகரனால் அறிவிக்கப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.காமராஜுக்கு வாழ்த்துத் தெரிவித்து நகரின் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும், நகராட்சிக்கு அருகிலும் வைக்கப்பட்டிருந்த  விளம்பர பதாகைகள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருப்பது நேற்று காலை  தெரியவந்தது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் நேற்று இரவு வரை யாரும் புகார் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.