சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணிக்க முடியாத மரணங்கள்
ஒருவருக்கு மரணம் எப்படி நிகழும் என்று யாரும் கணிக்க முடியாது என்று சொல்லும் வகையில் அண்மை காலமாக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபகாலமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, பார்ட்டியில் கலந்து கொள்ளும்போது என பலர் திடீரென உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சென்னையில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார். இவர் பணியாற்றி வரும் நிறுவனத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கார்த்திக் பங்கேற்காத நிலையில், அவரது நண்பர்கள் பங்கேற்றனர்.
சுருண்டு விழுந்து பலி
தனது நண்பர்கள் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், கார்த்திக் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த போட்டியில் கார்த்திக் நன்பர்களின் அணி வெற்றி பெற்றது. இதனால் கார்த்திக் உற்சாகத்தின் உச்சிக்கு சென்றார். நண்பர்கள் அணியின் வெற்றியை துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்து கொண்டாடினார்.கூச்சலிட்டபடி மைதானத்தை சுற்றி வந்தார்.
அப்போது கார்த்திக் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திகை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காரணம் என்ன?
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கார்த்திக்கின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். கார்த்திக்குக்கு சிறு வயது முதலே ஆஸ்துமா மற்றும் வலிப்பு நோய் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார்த்தின் திடீர் மரணம் அவரது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சென்னையில் பேட்மிண்டன் விளையாடிய ஒருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் தாமஸ் (50). இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் படை வீரர்கள் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். சென்னை தீவுத்திடல் அருகே அமைந்துள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பேட்மிண்டன்விளையாடியவர் உயிரிழப்பு
இவர் நேற்று முன்தினம் மாலை அண்ணா சாலையில் உள்ள ராணுவ மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடினார். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தண்ணீர் குடித்து விட்டு மைதானத்தில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜான்சன் தாமஸ் பரிதாபமாக உயிரிழ்ந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
