திருச்சி 

மலேசியாவில் விபச்சார தொழிலுக்கு விற்கப்பட்ட தஞ்சை பெண் பத்திரமாக மீட்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்டபோது பலவித சித்திரவதைகளை அனுபவித்ததாக விமானநிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் பானுப்பிரியா (25). கணவரை இழந்த இவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் மலேசியாவில் உணவக வேலைக்கு என பானுப்பிரியாவை கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார். ஆனால், மலேசியாவில் பானுப்பிரியாவுக்கு உணவகத்தில் வேலை எதுவும் வழங்கப்படவில்லை.

மாறாக விபச்சாரத்திற்காக சீனாவைச் சேர்ந்த ஒருவரிடம் விற்கப்பட்டிருக்கிறார். அவரிடம் இருந்து எப்படியோ தப்பித்த பானுப்பிரியா இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்து தனக்கு உதவி கேட்டு தஞ்சம் அடைந்தார். 

மேலும், அங்கு தனக்கு நடந்து வரும் சித்திரவதைகள் பற்றி பட்டுக்கோட்டையில் உள்ள தனது தாயார் பங்கஜவல்லிக்கும் தகவல் கொடுத்தார். பங்கஜவல்லி தனது மகளை மீட்டு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து மலேசிய தமிழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்ட பானுப்பிரியா தமிழகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பானுப்பிரியா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். 

அதில், "பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் என்னை மகள்போல் நடத்தினார். அவர் உணவக வேலைக்கு என என்னை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். நானும் அவரை நம்பினேன். ஆனால், மலேசியாவிற்கு சென்றதும் என்னை ஒரு சீனாகாரனிடம் அந்த பெண் 6000 வெள்ளிக்கு பாலியல் தொழில் செய்வதற்கு விற்றுவிட்டார். 

நான் அவரிடம் இருந்து தப்பி இந்திய தூதரகத்தில் புகார் செய்தேன். மலேசியாவில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் ஒருவர் நான் தமிழகத்திற்கு திரும்பி வர உதவி செய்தார். 

என்னைபோல பல பெண்கள் மலேசியாவில் விபச்சாரத்திற்காக விற்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் ஐந்து மாத காலம் நான் பல வேதனைகளை அனுபவித்துள்ளேன். இதற்கு காரணமான அந்த பெண் மீது விரைவில் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்" என்று அவர் கூறினார்.

பின்னர், திருச்சி வந்து சேர்ந்த பானுப்பிரியாவை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கார் மூலம் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.