வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திருமபிய கணவன், தன்னையும் பிள்ளைகளையும் பார்க்கமல், அவருடைய தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த பெண் ஒருவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுகையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, மாம்பழத்தான் ஊரணியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அழகுமீனாள் (23). இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார், கடந்த இரண்டு வருடங்களாக மலேசியாவில் வேலை பார்த்து விட்டு, இரு தினங்களுக்கு முன்பு, பொன்னமராவதி திரும்பி வந்துள்ளார். முதல் நாள் தனது தாய் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார், அன்று முழுவதும் அங்கிருந்து விட்டு, மறுநாள் (3 ஆம் தேதி) மாம்பழத்தான் ஊரணியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

செந்தில் குமார் வந்ததில் இருந்தே அவரிடம் எதுவும் பேசாமல் இருந்துள்ளார் அழகுமீனாள். குழந்தைகளுடன் பேசிய செந்தில் குமார், அருகில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்க்கும் தன் மனைவியின் தங்கையைச் சந்தித்த அவர், உன்னுடைய அக்கா என்கிட்ட பேசமால் அமைதியா இருக்கிறா? எட்னன காரணம்னு கேட்டு அவளை சமாதானம் பண்ணிட்டு வா என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் செந்தில்குமார்.

வீட்டுக்கு வந்து பார்த்த அழகு மீனாளின் தங்கை, அங்கு கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். மின் விசிறியில், அழகு மீனாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செந்தில் குமார், மனைவியின் சடலைத்தைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், செந்தில்குமார், அழகுமீனாளின் தங்கை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், நேராக வீட்டுக்கு வராமல், அம்மா வீட்டில் தங்கியதால் அழகு மீனாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.