A tiger that flows around the tea garden workers are afraid
நீலகிரி
நீலகிரியில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைப்புலி சுற்றி திரிவதால் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்து சிறுத்தைப் புலி பாய்ந்து தாக்குமோ என்று பீதியடைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை அருகே நான்சச், கிளன்டேல், ஆர்செடின் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
அடர்ந்த வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அதிகளவில் உள்ள இந்தக் கிராமங்களில் 1000-க்கும் மேற்ப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..
இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகளவில் வசித்து வருகின்றன. இவை பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்தும் அங்கிருக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அவ்வப்போது மக்களையும் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் நான்சச் கிராமத்தின் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித் திரிகிறது. நேற்று முன்தினம் அந்தச் சிறுத்தைப்புலி தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. பின்னர் அங்குள்ள பெரிய பாறையின் மீது ஏறி படுத்துக்கொண்டது. சிறுத்தைப்புலி பாறை மீது படுத்திருப்பதைப் பார்த்து அங்கு வேலைப் பார்த்த தொழிலாளர்கள் பீதியுடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு செல்வதற்குள் பாறை மீது அமர்ந்து இருந்த சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தைப்புலி சுற்றி திரிவதால் தோட்டத் தொழிலாளர்கள், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து தோட்டத் தொழிலாளர்கள் கூறியது, “சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் தொழிலாளர்களாகிய எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே மக்களை அச்சுறுத்தும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தனர்.
