இனியும் ஜி.கே.வாசனோடு பயணிக்க முடியாது.. பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்டி அடித்த தமாகா நிர்வாகி
ஜி.கே.வாசனோடு அரசியல் ரீதியாக தொடர்ந்து பயணிக்க முடியாத என்ற காரணத்தால் தமாகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஈரோடு கவுதமன் அறிவித்துள்ளார்.
பாஜக ஆதரவு நிலைப்பாடு
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த ஜி.கே.மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கட்சியில் இருந்து விலகியவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தவர், தற்போது பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதன் காரணமாக ஜி.கே.வாசன் உடன் இருந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து வெளியேறினர்.
அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்
இந்தநிலையில் தமாகாவின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், தமாகாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலை தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஜகவின் செயல்பாடுகள் அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரான, இந்த நாட்டு மக்கள் மனங்களில் வேற்றுமையை ஏற்படுத்தும் ஆபத்தான அரசியலாகும். இதனை ஏற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படும் வேதனையான சூழ்நிலையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த அவர்,
இனியும் தொடர்ந்து பயணிக்க முடியாது
இனி எதிர்காலத்தில் தலைவரோடு (ஜி.கே.வாசன்) அரசியல் ரீதியாக பயணிக்க முடியாது என்ற நிலையில், தமாகாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தமிழர் மாநில காங்கிரஸ் கட்சியின் பாஜக ஆதரவு முடிவின் காரணமாக அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசனோடு சுமார் 40 ஆண்டுகள் பயணித்த ஈரோடு கவுதமன் விலகி இருப்பது ஜி.கே.வாசன் உள்ளிட்ட தமாக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.