A student stabbed by a knife! Investigate the teacher!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாணவன் ஒருவனால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இதில் ஆசிரியர் பாபு பலத்த காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்தியவர்கள், பதினோராம் வகுப்பு மாணவன் என்பதும், கேள்வி கேட்டு திட்டியதால் மாணவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து
ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்திய மாணவன், சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான். தலைமை ஆசிரியரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியர் ஒருவர், மாணவனைக் கத்தியால் குத்திய சம்பவம் கரூரில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைச் சேர்ந்த மாணவன் ரஹ்மான் (16). இவர் கரூர் மாவட்டம் மணவாடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவராக தங்கி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் பன்னீர்செல்வம். இவர், கருர், தாந்தோணிமலையில் வசித்து வருகிறார்.

ரஹ்மான், தனியார் கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்துக்கும் ரஹ்மானுக்கும இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களிடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், தான் வைத்திருந்த சிறிய கத்தி ஒன்றால், ரஹ்மானின் உடலில் நான்கைந்து இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மாணவன் பலத்த காயமடைந்தான். மாணவன் ரஹ்மான் அலறியதைக் கேட்ட அருகில் இருந்தோர், மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மாணவனை ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து, வெள்ளியணை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைமை ஆசிரியரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.