டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி - வாலிபருக்கு தீவிர சிகிச்சை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெற்று வந்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே ஜெய்ஹிந்த் நகர், மபொசி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களை சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து, கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுபற்றி அறிந்ததும், மாவட்ட சுகாதார அதிகாரிகள், மேற்கண்ட 2 பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் குப்பை கழிவுகளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் , ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த தில்ஷாத் (34) என்ற இளம்பெண்ணுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது, தில்ஷாத்துக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக  இறந்தார். இதனால் அவரது கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதேபோல் மபொசி நகரை சேர்ந்த வியாபாரி சதீஷ் (30) டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மேற்கண்ட 2 பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிப்பவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பல்வேறு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.