A bus hits a bike and bullock one died
கடலூர்
கடலூரில் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி மீது அரசு பேருந்து படுவேகமாக மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இருவர் மற்றும் மாட்டு வண்டியில் வந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
புதுப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுபாஷ் (21). இவர் கோவையில் உள்ள ஒரு நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுக்கு வந்தார். இவரது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), ரமேஷ் இருவரும் ஓசூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிகண்டன், ரமேசின் மகன் ரோசன் (8) ஆகியோர் ஓசூரில் இருந்து தங்களது சொந்த கிராமமான பணப்பாக்கத்துக்கு புறப்பட்டனர். இவர்கள் நேற்று காலை 4 மணியளவில் பேருந்தில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
இதனையடுத்து, இருவரையும் அழைத்து வருவதற்காக சுபாஷ் தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி வந்தார். பின்னர் அவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு பணப்பாக்கம் நோக்கி சுபாஷ் வந்தார்.
அப்போது பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து இவர்கள் மீத வேகமாக மோதியது. மேலும், அந்த வழியாக வந்த மாட்டுவண்டி மீதும் அந்த பேருந்து பலமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சுபாஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன், ரோஷன் மற்றும் மாட்டு வண்டியில் வந்த எல்.என்.புரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) ஆகியோர் பலத்த காயமடைந்ததால் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ராஜ், உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபாஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
