20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும், 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாகவும் உயர்த்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
உயர்கிறது முத்திரை தாள் கட்டணம்
தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி . மூர்த்தி தாக்கல் செய்தார். முத்திரைத் தாள் கட்டணம் உயர்வுக்கான சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி எதிர்ப்பு தெரிவித்தார். 1889 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் ஆவணங்களுக்கான கட்டணம் விதிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரை கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்
இதன் காரணமாக 1889 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 100ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் , நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும். நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
