8o years old man silver srinivasan theft

சென்னை மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வழியில் ஒரு முதியவர் வெகு நேரமாக அமர்ந்திருப்பதை கண்டு அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த சில்வர் சீனிவாசன் வயது 84 ( வெள்ளிப் பொருட்களை அதிகம் திருடியதால் பட்டம்) என்பது தெரிந்தது. மயிலாப்பூரில் பல வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சாமியார் வேடத்தில் சென்று நைசாக பேச்சு கொடுப்பார். அவர்கள் வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறுவார்.


இதற்கு சம்மதிக்கும் பெண்களின் வீட்டில் பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் தங்க நகைகளை போடச்சொல்வார். பின்னர் பூஜை செய்வதுபோல் நடித்து பாத்திரத்தில் இருக்கும் நகைகளை எடுத்துக்கொண்டு தன்னிடம் இருக்கும் போலி நகையை அதில் போட்டுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து நகையை எடுத்துக்கொள்ளும்படி கூறிவிட்டு தப்பிச்சென்றுவிடுவார்.

இவர் ஏற்கனவே வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளில் சிக்கி சிறை சென்றுள்ளார். 

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளை மீட்டனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தன் வயதை திருட்டு ப்ளஸ்ஸாக மாற்றிய சில்வர் சீனிவாசனின் கைவரிசையை தடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.