சென்னை விமான நிலையத்தில் 84வது முறையாக நடந்த விபத்தில், 7 அடி உயரம், 4அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது.

சென்னை விமான நிலையத்தில், கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2000 கோடியில் கண்ணாடி மாளிகை போல் பிரமாண்டமாக கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் முதல் கடந்த வாரம் வரை 83 விபத்துகள் நடந்துள்ளன.

இந்த விபத்தில் மேற்கூரைகள் சரிந்து விழுவது, கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்குவது, சுவரில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள், சலவை கற்கள் உள்பட பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இதனால், பயணிகள், மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய ஊழியர்கள் உள்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை உள்நாட்டு முனையத்தில், பயணிகள் புறப்பாடு பகுதியின் முதல் தளத்தில், விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு, நேற்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில், திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லை. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென கண்ணாடி உடைந்து விழுந்ததில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அலறியடிது கொண்டு ஓடினர்.

இதையறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். பின்னர் ஊழியர்களை வரவழைத்து அவசர அவசரமாக கண்ணாடி இடிபாடுகளை அகற்றினர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பேட்டரி கார் அவ்வழியாக சென்றபோது, கண்ணாடியில் உரசியது. இதனால், இந்த விபத்து ஏற்பட்டு கண்ணாடி உடைந்ததாக கூறி சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விமான நிலைய பராமரிப்பில், தொடர்ந்து அலட்சியம் காட்டினால், விபத்துகளின் எண்ணிக்கை விரைவில் செஞ்சுரியை தாண்டிவிடும் என்றனர்.