67 people arrested for emphasis public sector companies to private
கரூர்
"பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிற்சங்கங்களை சேர்ந்த 67 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எச்.எம்.எஸ். மற்றும் ஏ.ஐ.யூ.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
பொது விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
வேலையின்மையை போக்கி வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு அனைத்து தரப்பினருக்கும் குறைந்தபட்ச பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கரூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கரூர் பேருந்து நிலையம் நோக்கி வந்த பேருந்துகளை முற்றுகையிட்டதால் கரூர் நகர காவலாளார்கள் 9 பெண்கள் உள்பட மொத்தம் 67 பேரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
