3 women suicide in Nellai

கர்ப்பமாக்கி, காதலன் கைவிட்ட நிலையில் குடும்பத்துடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி சீதை. இவர்களுக்கு சொர்ணமாரி, பத்மா என்ற இரு மகள்கள் இருந்தனர். சொர்ணமாரி, வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தில் தபால் ஊழியராக பணியில் உள்ளார்.

இவர், அம்பாசமுத்திரத்தில் இருந்து சங்குபுரத்துக்கு தினமும் பேருந்தில் பணிக்கு சென்று வந்தார். பேருந்தில் நடத்துனராக பணிபுரியும் வேலுச்சாமிக்கும் சொர்ணமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

சொர்ணமாரி கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் சங்குபுரத்திலயே வாடகை எடுத்து தங்கியிருந்தார். வேலுச்சாமியுடனான திருமணம் செய்து கொள்ள சொர்ணமாரி முடிவெடுத்திருந்தார். இந்த நிலையில், தந்தை பழனி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தாரும் சேர்ந்து சொர்ணமாரிக்கும் வேலுச்சாமிக்கும் இடையே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

வேலுச்சாமியுடனான நெருக்கம் அதிகரித்ததால் சொர்ணமாரி கர்ப்பம் அடைந்துள்ளார். வேலுச்சாமி கூறியதால், சொர்ணமாரி கர்ப்பத்தையும் கலைத்துள்ளார்.

இந்த நிலையில் வேலுச்சாமி, திடீரென சென்னைக்கு சென்று விட்டார். மேலும் சொர்ணமாரியுடன் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார். திருமணம் செய்யவும் வேலுச்சாமி மறுத்துள்ளார்.

வேலுச்சாமியின் இந்த நடவடிக்கையால் சொர்ணமாரி மனம் உடைந்தார். சொர்ணமாரி மட்டுமல்லாது தாய் சீதை, தங்கை பத்மா ஆகியோரும் மனம் நொந்தனர். இந்த நிலையில், சொர்ணமாரி, தாய் சீதை, தங்கை பத்மா ஆகியோருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். 

சொர்ணமாரியின் வீடு வெகு நேரமாக திறக்காத நிலையில், அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, சொர்ணமாரி, சீதை, பத்மா ஆகியோர் சடலமாக இருந்தனர். மேலும் அங்கிருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது குடும்பத்தினரின் தற்கொலைக்கு வேலுச்சாமி, மெர்சி, குமுதா, ராம்கி என்ற ராமசந்திரன் ஆகியோரோ காரணம் என்றும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.