கரூர்

கரூரில் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் 29 ஆயிரத்து 370 பேர் பயன் பெறுகின்றனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.87 இலட்சத்து 60 ஆயிரம்  மதிப்பில் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார்.  இதில், சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவர், பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். 

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், "பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

அதில் தாலிக்கு தங்கம் வழங்குவது, பெண் கல்விக்கான உதவித்தொகை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும். அந்த வகையில் ஏழை - எளியோர், முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதிர் கன்னிகள் ஆகியோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இதில் மாதாமாதம் அவர்களுக்கு ரூ.1000 கொடுக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 29 ஆயிரத்து 315 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். 

இன்று (அதாவது நேற்று) 55 பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்படுகிறது. இத்துடன் மொத்தம் 29 ஆயிரத்து 370 பயனாளிகள் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பிலும், விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.34 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், 

கணவனால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.87 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்ரமணியன், மண்மங்கலம் வட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் (முதியோர் உதவித்தொகை) பி.பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், 

மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கமலக்கண்ணன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.செல்வராஜ், காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் வழக்குரைஞர் சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.