திண்டிவனத்தில், டாக்டர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து 250 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜெயபுரம் நகர் பகுதியில் கஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். மருத்துவரான இவர், மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு டாக்டர் கஜேந்திரனும், அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் பின் பக்கத்தில் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். 

வீட்டின் பூஜை அறைக்குள் சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த 250 சவரன் நகையை கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

காலையில் எழுந்த டாக்டரும் அவரது மனைவியும், ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பூஜை அறைக்கு சென்று பார்த்த அவர்கள் லாக்கரில் இருந்த 250 சவரன் நகை கொள்ளை போயிருப்பதைக் கண்டனர்.

நகைகள் கொள்ளை போனது குறித்து, டாக்டர் கஜேந்திரன், காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அங்கு வந்த டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், தடயங்களைச் சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.