கரூர்

கரூரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சுங்கச்சவாடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அறிவித்திருந்தனர். 

அதன்படி, கரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசியில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த மாயனூர் காவலாளர்கள், 15 பெண்கள் உள்பட 25 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது செய்தனர். 

கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.