2 pachchaiyappan college students suspended for train issue

ரயிலில் கத்தியுடன் திரிந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படிக்கும் மாணவன் பாரதிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர், நெமிலிச்சேரிக்கு சென்ற புறநகர் ரயிலில், கத்தி, கம்பு, வீச்சரிவாள், பட்டாசுகளுடன் ரயிலில் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி கத்தியவாறே பயணம் செய்த காட்சி வீடியோவாக வைரலாகி வந்தது. 

அந்த வீடியோவில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மாலை நேரத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்தனர். 

மேலும் ரயிலை விட்டு இறங்கியதும், பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்களென கோஷமிட்டுக் கொண்டு கத்தியை சுழற்றியபடி குத்தாட்டம் போட்டனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகளை சோதனை மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது கத்தியை கொண்டு சென்றவர்களில் ஒரு மாணவனை பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அந்த மாணவர் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், அதே கல்லூரியைச் சேர்ந்த விக்னேஷ், ஜெகதீஸ்வரன், பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

கைதான 4 மாணவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் 4 பேரும் இனி தவறு செய்யமாட்டோம் தங்களை மன்னித்துவிடுமாறு காவல் நிலையத்தில் கதறி அழுதனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ரயிலில் கத்தியுடன் திரிந்தது பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கல்லூரியின் முதல்வர் தெரிவித்திருந்தார். 

அதன்படி, கடந்த 16 ஆம் தேதி சென்னை மின்சார ரயிலில் மாணவர்கள் கத்தியுடன் சென்ற காட்சியை வெளியிட்டதால் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படிக்கும் மாணவன் பாரதிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அதைதொடர்ந்து இன்று பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த லோகு, சரண் ஆகிய மேலும் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.