2 lakh 48 thousand 286 children in Cuddalore tomorrow is thrown into drops collector announcement
கடலூர் மாவட்டத்தில் 2 இலட்சத்து 48 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு நாளை நடைபெற இருக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது என்று கடலூர் ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), 30– ஆம் தேதியும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
போலியோ சொட்டு மருந்து தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் ராஜேஷ் கடலூரில் நேற்றுத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ஜவஹர்லால் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக ஆட்சியர் ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணிகள் இருகட்டங்களாக வருகிற ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள், புதிதாக உருவான காலனிகள் போன்ற இடங்களில் 1613 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 2 இலட்சத்து 48 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது. இந்த பணியில் பல்வேறு துறைகளை சார்ந்த 6 ஆயிரத்து 452 பணியாளர்களும், 209 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளனர்.
இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் 10 சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இப்பணிகளுக்காக நடமாடும் குழுக்கள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கோவில்கள், மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களில் அவர்களின் வீடுகளுக்கேச் சென்று சொட்டு மருந்து புகட்டப்படும்.
எனவே, போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் 2 மற்றும் 30–ஆம் தேதியன்று தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே சொட்டு மருந்து புகட்டப்பட்டு இருப்பினும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து புகட்டி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று ஆட்சியர் ராஜேஷ் அந்தச் செய்திக்குறிப்பில் கூறியிருந்தார்.
