திருப்பதி அருகே தமிழக அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

சேலத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்து. 

அந்த பேருந்தை டிரைவர் வெங்கடாசலம் ஓட்டிச்சென்றார். அப்போது, திருப்பதியை அடுத்துள்ள பேரூர் என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. 

இதில் ஓட்டுனர் வெங்கடாசலமும் பேருந்தில் பயணித்த சுந்தரராஜ் என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்களும் தகவலறிந்து வந்த போலீசாரும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.