தூத்துக்குடி

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்கள் வழங்கப்பட்டன.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன்றைய நாளில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதனை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும், அவர், குழந்தைகளின் தாயார்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். அத்துடன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைத்து உள்நோயாளிகளுக்கும் ஹார்லிக்ஸ், பிரட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரவி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோன்று, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன் ஏற்பாட்டில், தங்க மோதிரம் வழங்கும் விழா நடந்தது.

தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, ஒன்பது குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோன்று, ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் தி.மு.க. கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.