டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, 183 பேர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பீதியுடன் உள்ளனர். தற்போது கோவையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் பிளஸ் 1 மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

கோவை புலியகுளத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்சவர்சினி, டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 14 பேர் சிறப்பு வார்டுகளிலும், சாதாரண காய்ச்சல் பாதித்த 126 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தபோது கோவை அரசு மருத்துவமனையில் 183 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. சாதாரண காய்ச்சலால், பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில், யாருக்கும் டெங்கு அறிகுறி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக டெங்கை ஒழிக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.