வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக வங்க கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை கிடைக்கிறது.

இந்த நிலையில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று வலுப்பெற்று இருப்பதாகவும், இதனால் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரி கடல் பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் (நாளை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.


அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்திலும், வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


மன்னார் வளைகுடா, தென் தமிழக கடற்கரை பகுதிகள், குமரி கடல், மாலத்தீவுகள், தெற்கு கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு 30-ந் தேதி (இன்று) வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனிடையே மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.