கோவை 80 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை 80 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் மட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இறுதியாக 12,607 பதவிகளுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்மனு தாக்கல் முடிந்து, கடந்த 7 ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் பிரசாரம் தீவிரம் அடைந்தது. வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்தனர். பிரசாரம் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதனிடையே கோவை 80 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 ஆவது வார்டு அசோக் நகர் கோவிந்த சாமி லே அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் அட்டை பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. ஹாட் பாக்ஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து பாஜகவினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, தெற்கு மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருண் மற்றும் காவல் துறையினர் ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.