கடலூர்,

கடலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரும், தொழிலாளர்களும் திரளாக வந்து அரசு பேருந்து டெப்போவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட கடலூர் மண்டலத்தில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு ஆகியன வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க உபயோகப்படுத்தப்படும் எந்திரங்கள் அனைத்தும் பழுதான நிலையில் உள்ளதால் புதிய எந்திரங்கள் வழங்க வேண்டும், பழுதடைந்த பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் வழங்க வேண்டும், பேருந்து தொழிலாளர்களின் மூன்று ஷிப்ட் வருகையை குறைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு பேருந்து டெப்போ தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி அரசு பேருந்து டெப்போ வளாகத்துக்குள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களும் நேற்று காலை 9.30 மணி அளவில் திரண்டனர். இதனால் டெப்போ முன்பு பாதுகாப்புக்காக துணை காவல் கண்காணிப்பாளர் நரசிம்மன் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் டெப்போவுக்குள் திரண்டு நின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெப்போவுக்குள் பேருந்துகள் வர முடியாமலும், டெப்போவுக்குள் இருந்த பேருந்துகள் வெளியே செல்ல முடியாமலும் இருந்ததால் போக்குவரத்து தொழிலாளர்களை கைது செய்து ஏற்றிச் செல்வதற்காக டெப்போ முன்பு காவல் வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து டெப்போவுக்குள் அமர்ந்து முழக்கமிட்டுக் கொண்டு இருந்த தொழிலாளர்களை கைது செய்வதற்கான முயற்சியில் காவலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் டெப்போவுக்குள் இருந்து போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை கைது செய்ய முடியாது, ரோட்டுக்கு வந்தால் கைது செய்து கொள்ளுங்கள் என்று காவலாளர்களிடம் சி.ஐ.டி.யூ. சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன் கூறினார்.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்களை கைது செய்ய முடியாததால், டெப்போவுக்குள் பேருந்துகள் வருவதற்கு ஏதுவாக வழிவிட்டு ஓரமாக நின்று போராடுங்கள் என்று துணை காவல் கண்காணிப்பாளர் நரசிம்மன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேண்டிக் கொண்டார்.

அப்போது டெப்போவுக்குள் செல்வதற்காக வந்த பேருந்துகளை உள்ளே அனுப்பி விடுவதற்கான முயற்சியில் ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டார்.

ஆனால் பேருந்தை உள்ளே கொண்டு வர வேண்டாம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கைகளை உயர்த்தி முழக்கமிட்டதால் டெப்போவுக்குள் பேருந்துகள் வராமல் பேருந்து நிலையத்துக்கு சென்றன. இதனால் டெப்போ பரபரப்புடன் காணப்பட்டது.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமான நிலையை நோக்கி சென்றதால், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முன்வந்தனர்.

இதையடுத்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் டைட்டஸ் தலைமையில் தாசில்தார் அன்பழகன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளான தொ.மு.ச.பொதுச்செயலாளர் தங்கஆனந்தன், தலைவர் பி.பழனிவேல், சி.ஐ.டி.யு. சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் ஜான்விக்டர், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெயசங்கர், பொதுச்செயலாளர் வீரமணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் மணிமாறன், தலைவர் வேணு, விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ஞானபிரகாசம், தே.மு.தி.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் தண்டபாணி, தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.