Thyagarajar Kovil : திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா! கமலாலய குளத்தில் வண்ணமிகு ஏற்பாடு!
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் புகழ்பெற்ற தெப்பத் திருவிழா தொடங்கியதுயுள்ளது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற வைகாசி தெப்பத் திருவிழா நடைபெறு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா இன்று தொடங்கியது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலருகே 5 வேலி பரப்பில் கமலாலய குளம் அமைந்துள்ளது. 64 தீர்த்தக் கட்டங்களுடன் இந்த குளம் உள்ளது. ஈசனின் வேள்விக்குண்டமாக இந்த குளம் விளங்குவதாக ஐதீகம். அதிலிருந்து ஸ்ரீலலிதாம்பிகை தோன்றியதாகவும், மகாலட்சுமி தவம்புரியும் தீர்த்தமாகவும் கமலாலய குளம் கருதப்படுகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி 27ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்கென 50 அடி நீள அகலத்தில் தெப்பம் கட்டப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. வண்ண வண்ண அலங்கரிப்புக்கு பிறகு தெப்பத்தின் உயரம் சுமார் 30 அடியாக இருக்கும். 400 க்கும் மேற்பட்ட தகர காலி பேரல்களை கொண்டு 2 அடுக்குகளாக தயாரிக்கப்பட்ட தெப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பயணிக்கும் வகையில் தெப்பம் கட்டப்பட்டுள்ளது..
இதையடுத்து தெப்பத்திருவிழாவிற்காக பார்வதி சமேத கல்யாணசுந்தரர் இன்று காலையில் தெப்பத்திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு தெப்பத்தில் இருவரும் எழுந்தருளியதும் தீபாரதனை காண்பிக்கப்பட்டு தெப்பத்திருவிழா தொடங்கியது. இந்த தெப்ப திருவிழாவை திருவாரூர் மட்டுமல்லாது அருகில் உள்ள நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
தெப்ப திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 19 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு திருட்டு போன்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று நடமாடும் மருத்துவமனை தீயணைப்பு வண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த தெப்பத் திருவிழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.