திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி  அருகே இருக்கிறது மேல ராதாநல்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விஜய ராகவன். இவரது மகன் தீபக்(13). அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்து வருகிறார். விஜய ராகவன் ஆட்டோ ஓட்டும் தொழில் பார்க்கிறார். 

குடும்பத்தின் நிலை உணர்ந்து மாணவன் தீபக் சிறு வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கி வருகிறார். கல்வி மட்டுமின்றி விளையாட்டு, ஒழுக்கம் போன்றவற்றிலும் தீபக் முதல் மாணவனாக விளங்குவதாக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சமீபத்தில் முடிந்த காலாண்டு தேர்வில் அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று 90 சதவீதத்தை எட்டியிருக்கிறார்.

இந்தநிலையில் தீபக் நேற்று பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் வகுப்பு ஆசிரியர்க்கு தீபக் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய ஊரில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றதால் உடல்சோர்வாக இருப்பதாகவும் அதனால் ஒருநாள் மட்டும் விடுப்பு தருமாறு கேட்டுள்ளார். இதைக்கண்டு வகுப்பாசிரியர் ஆச்சரியமடைந்திருக்கிறார். அந்த விடுப்புக்கடிதத்தை தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் அவர் காட்டியுள்ளார்.

மறுநாள் பள்ளியில் மாணவன் தீபக்கை அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த விடுப்பு கடிதத்தை வகுப்பு ஆசிரியர் சமூக ஊடகத்தில் பரவ விட அது தற்போது வைரலாக பரவி வருகிறது. தலைவலி, காய்ச்சல் என்று ஏதோதோ பொய் சொல்லி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மத்தியில் உண்மையை சொல்லி நேர்மையாக செயல்பட்ட மாணவனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.