கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு ஒரு பேருந்தில் சுற்றலா வந்திருந்தனர். பின்னர் மீண்டும் கேரளா நோக்கி இன்று காலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து வந்தபோது பலத்த மழை பெய்துள்ளது.

நீர்முளை பகுதியில் சாலையில் இருந்த ஈரப்பதத்தால் எதிர்பாராத விதமாக வலுக்கிய பேருந்து சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்தில் வந்தவர்கள் பதற்றத்துடன் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலருமான தமிமுன் அன்சாரி காரில் வந்துள்ளார். விபத்தை பார்த்து உடனடியாக காரை நிறுத்திய அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்று விசாரணை செய்தார்.

பின் அருகே இருந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்த அவர், பூட்டப்பட்டிருந்த பள்ளிவாசலை திறக்கச்செய்து கேரள சுற்றுலா பயணிகளை அங்கு தங்க வைத்தார். இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர் மூலமாக சகதியில் சிக்கியிருந்த பேருந்தை மீட்க வழிவகை செய்தார். அதன்பிறகே கேரள பயணிகள் மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பள்ளிவாசலில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வை கேரள பயணிகள் மற்றுமின்றி அப்பகுதி மக்களும் பெரிதும் பாராட்டினர்.