திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே இருக்கிறது கீரன் கோட்டகம் கிராமம். இந்த ஊரில் பழமையான மாரியம்மன் கோவில் இருக்கிறது. ஊரின் பொது கோவிலான இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தற்போது வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டும் பூஜை நடந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கோவில் வேலைக்கு சிமெண்ட் மூடைகள் வந்திருக்கிறது. அதை வைப்பதற்காக கோவிலை பூசாரி திறந்திருக்கிறார். அப்போது கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை திருடு போயிருந்தது. இந்த சம்பவம் காட்டு தீயாக பரவ கிராம மக்கள் கோவிலில் திரண்டனர்.

கோவில் நிர்வாகம் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களவு போன அம்மன் சிலை ஒன்றரை அடி உயரம் என்றும் அதன் தற்போதைய மதிப்பு ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.