வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கருணாநிதியின் பெயர் - திருவாரூர் கூட்டுறவு சங்க தேர்தலில் வெடித்த சர்ச்சை .
திருவாரூர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பெயர் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருக்குவளை ஆகும் . திருவாரூர் வடக்கு ரதவீதியில் இருக்கும் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு பழமையானது. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி இந்த வங்கியில் தான் முதன் முதலில் உறுப்பினராக சேர்ந்தார் .
இந்த வங்கிக்கான நிர்வாக குழு தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களில் கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது . வாக்காளர் பட்டியலில் மிகத் தெளிவாக தெற்கு வீதி , முத்துவேலுவின் மகன் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அதுமட்டுமின்றி கருணாநிதியின் நண்பர் தென்னனின் பெயரும் அதில் இருந்தது . இது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .
இதுகுறித்து விளக்கமளித்த வங்கி நிர்வாகம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வங்கிக் கணக்கு இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதன் காரணமாகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றதாக கூறியுள்ளனர் . எனினும் இது போன்று மறைந்த உறுப்பினர்களின் பெயர் வரும்காலங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் கவனிக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .