திருவாரூரில் அரசு நகர பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து கோர விபத்து
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓரமாக திருப்பப்பட்ட அரசு நகரப்பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டியில் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியகாடு செல்லும் அரசு நகர பேருந்தை ஓட்டுனர் சிவபாலன் ஓட்டிவந்தார். பாண்டி வளைவு அருகே பேருந்து வந்தபோது எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை வேகமாக திருப்பியபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
இதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்துலிலிருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டனர்.
விபத்து குறித்து உடனடியாக எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயணிகளை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எடையூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.