தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்திற்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

ஏற்கனவே கெயில், நியுட்ரினோ உள்ளிட்ட திட்டங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு வரும் என விவசாயிகள் அஞ்சி வரும் நிலையில், இந்த அறிவிப்பு விவசாயிகளைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விவசாயிகள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்கள் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, “சோழ நாடு சோறுடைத்து என்ற பழமொழி மிகப்பிரசித்தி பெற்றதாகும். அதை சுடுகாடு ஆக்கும் முயற்சி நடக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அரிசி வழங்குவது சோழ மண்டலம் என்று அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்கள் ஆகும். ஏற்கனவே வேறு பல திட்டங்களால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்திருப்பது இப்பகுதி விவசாயத்தை அழிக்கவே செய்யும். எனவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றனர்.