திருவாரூரில் வெளுத்துவாங்கும் கனமழை… தண்ணீரில் மூழ்கிய நெற்கதிர்கள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.!
கனமழையால் சேதமடைந்த பயிர்களின் மதிப்பீட்டை கணக்கிட்டு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் சேதமடைந்த பயிர்களின் மதிப்பீட்டை கணக்கிட்டு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அறுவடைக்கு தயராகும் வேளையில் கனமழையால் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், இந்தாண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குருவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாத போராட்டங்களுக்குப் பின்னர் நெற்கதிர்கள் குளைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நெற்கதிர்கள் நீரில் சாய்ந்து முழுவதும் சேதமடைந்துள்ளன. வயல்களிலேயே நெல்மணிகள் முளைகட்ட தொடங்கிவிட்டதால் கனமழையிலும் விவசாய்கள் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.
நகைகளை அடகு வைத்தும், கந்து வட்டிக்கு பணம் வாங்கியும் குருவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். பயிர் சேதங்களை உடனடியாக கணக்கிட்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.