திருவாரூரில் விவசாய தொழிற்பேட்டை: அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்!
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைய விரைவில் இடம் தேர்வு செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டி, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபெறும் வகையில் நடத்தப்பட்டது. இதில் மண்டல அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் உள்ளிட்ட 1500 பேருக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் போன்றவற்றை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்எல்ஏ கலைவாணன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, “விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின் படி விளையாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இன்று திருவாரூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1500 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்றார்.
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, டெல்டா காரராக முதலமைச்சர் அவற்றில் எதெல்லாம் சரியோ வெகு விரைவில் அவற்றினை நிறைவேற்றுவார் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய டிஆர்பி ராஜா, “விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. குறிப்பாக நமது மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற் பேட்டை அமைய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. நமது மாவட்டத்திலேயே அதற்கான இடம் வெகுவிரைவில் தேர்வு செய்யப்படவிருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட உடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கப் போகின்றது. அதையும் தாண்டி இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.” என்று தெரிவித்தார்.