தமிழகத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்கிறது. இதன்காரணமாக அணைகள் நிரம்பி ஆறுகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடு இடிந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று கோவை அருகே இருக்கும் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் இது வரையில் 158 வீடுகள் மழையால் இடிந்து விழுந்ததாக மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

கடந்த 28 ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் 49 கூரை வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்திருப்பதாகவும், 80 கூரைவீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் தெரியவந்ததுள்ளது. மேலும் 29 ஓட்டுவீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 850 ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி வயல்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மழை மேலும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் அதிகமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாதிப்படைந்த மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.