தென்னந்தோப்பில் சூதாட்டம்; 3 சொகுசு கார்கள் பறிமுதல், 12 பேர் கைது
மன்னார்குடி அருகே தென்னந்தோப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று சொகுசு கார்கள், எட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ரோந்து பணியானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மன்னார்குடி அருகே மெய்ப்பழத் தோட்டம் என்கிற இடத்தில் செந்தமிழ்ச் செல்வன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
போதை தலைக்கேறி மின் கம்பியை பிடித்த நபர் உடல் கருகி உயிரிழப்பு
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றி காவல் துறையினர் பிரேம்குமார் (35), பிரபாகரன் (38) ஆகியோர் உள்ளிட்ட 12 நபர்களை கைது செய்தனர். மேலும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயணித்து வந்த 3 சொகுசு கார்கள், 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இன்ஸ்டா லைக்குக்காக புகைபிடித்துக்கொண்டு கத்தியுடன் ரீல்ஸ் போட்ட வீரமங்கைக்கு காவல்துறை வலைவீச்சு
மேலும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தடையை மீறி சூதாட்டம் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.