தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வேத வினோத். இவரது இரண்டு வயது மகள் கிருத்தன்யா. வேத வினோத் சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே குழந்தை கிருத்தன்யாவிற்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கும்பகோணத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குழந்தை  கிருத்தன்யா பரிதாபமாக உயிரிழந்தாள். அதைக்கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பருவ மழை தீவிரமடைந்து வருவதால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றது. இதன்காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. குறிப்பாக குழந்தைகளே இதனால் அதிகம் பாதிப்படைவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.