தஞ்சை மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த வெடிகுடோனில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பட்டாசு தயாரிக்கும் ஆலைகள்
தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடித்து விபத்து காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஓய்ந்தபாடியில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நிகழ்ந்ததாகவும், இதில் 130 தொழிலாளர்கள் மரணம், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
குடோனில் வெடி விபத்து
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி வெடி குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு பல தொழிலாளிகள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரியாஸ்(19), சுந்தர்ராஜ்(60) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோன்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் இந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
