காவேரி கடைமடை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், காவேரி கூக்குரல் பயணத்தின் போது சத்குரு ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரையால் ஈர்க்கப்பட்டு தனது மகளுக்கு ‘காவேரி ஸ்ரீ’ என பெயர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக, மருத்துவர் திரு.ஷாட்சி சுரேந்திரன் கூறுகையில், “காவேரி கூக்குரல் பயணத்தின் போது சத்குரு எங்களுடைய தஞ்சாவூருக்கு வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக நானும் எனது மனைவியும் சென்று இருந்தோம். அந்நிகழ்ச்சியில் சத்குரு பேசும்போது, நாட்டில் ‘காவேரி’ என சொன்னாலே எல்லாரும் ‘காவேரி பிரச்சினை, காவேரி பிரச்சினை’ என சொல்கிறார்கள். காவேரி என்றாலே அது பிரச்சினை என யோசிக்கிறார்கள். அப்படி யோசிக்க வேண்டாம். அவள் நம் உயிருக்கு மூலமானவள். இனி, காவேரி என சொன்னாலே நம் இதயத்தில் அன்பும் நன்றி உணர்வும் பொங்கி வழிய வேண்டும்.

அதற்கு உங்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு காவேரி என பெயர் சூட்டுங்கள். நீங்கள் அந்த குழந்தையின் பெயரை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் உங்கள் இதயத்தில் அன்பு பொங்க வேண்டும் என்றார். அவர் பேசிய வார்த்தைகள் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

நமக்கு பெண் குழந்தை பிறந்தால் காவேரி என பெயர் வைக்க வேண்டும் என்று அப்போது முடிவு எடுத்தோம். அதேபோல், கடந்த மே 29-ம் தேதி எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. சத்குரு சொன்னதை போலவே நாங்கள் எங்கள் குழந்தைக்கு ‘காவேரி ஸ்ரீ’ என பெயர் வைத்தோம்.

காவேரி கடைமடை பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு காவேரி நதி எந்தளவுக்கு முக்கியம் என்பது நன்றாகவே தெரியும். ’வேளாண் காடு வளர்ப்பு’ மூலம் காவேரி நதிக்கு புத்துயீரூட்ட ஈஷா தன்னார்வலர்கள் களப் பணியாற்றி வருவதை நான் கவனித்து வருகிறேன். என் மகள் காவேரிக்கு 12 வயது ஆகும் போது எங்கள் தாய் காவேரியும் பழைய படி பெருக்கெடுத்து ஓடி எங்கள் வாழ்வை செழிப்பாக்குவாள் என நம்புகிறேன்” என்றார்.

இதை அறிந்த சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீங்கள் காவேரித் தாயின் பெயரில் காவேரிஸ்ரீ என்று மகளுக்கு பெயர்சூட்டி இரண்டு மகத்தான உயிர்களுக்கு ஊட்டமளிக்க உறுதியேற்றுள்ளீர்கள். காவேரித்தாய், மகள் காவேரி, இருவரும் உங்களுக்கு செழிப்பும் மகிழ்ச்சியும் வழங்கட்டும். ஆசிகள்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.