சி.எம் ஆர்டரையே மீறுவீங்களா.? 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுனு பீதியை கிளப்பிய அதிகாரிக்கு செம விளாசல்
9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்ததையடுத்து, முதல்வர் உத்தரவை மீறி தேர்வு என்று எப்படி அறிவித்தீர்கள் என்று ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் கண்டித்ததுடன், மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.
2020-2021 கல்வியாண்டிலும் பள்ளிகள் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் இந்த கல்வியாண்டிலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார்.
மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமல்லாது பள்ளிக்கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், உடனடியாக இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், முதல்வரின் உத்தரவை மீறி தேர்வு என்று அறிவிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதல்வரின் உத்தரவையே மீறுவீர்களா? என்று கண்டித்ததுடன், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது.