அஞ்சல் துறையில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஞ்சலகத்தில் வைத்திருந்த சேமிப்பு கணக்கை வழக்கறிஞர் ஒருவர் முடித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 
அஞ்சலகத்தில் வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்காக நடைபெறும் எழுத்து தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அத்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் அஞ்சல் துறை  தபால் துறை பணிகளுக்கான தேர்வுகளை 1,200 எழுதினர். 
இதற்கிடையே அஞ்சல் துறையின் பாரபட்சத்தை கண்டித்து அஞ்சலக சேமிப்பு கணக்கை வழக்கறிஞர் ஒருவர் முடித்துக்கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.  திருவிடைமருதூரில் உள்ள  குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியப் புறக்கணித்ததற்காக தனது கணக்கை முடித்துக்கொடுக்கும்படி கடிதம் எழுதியது சமூக ஊடங்களில் வைரல் ஆகியுள்ளது. 
இதுதொடர்பாக குறிச்சி கிளை அஞ்சல் நிலையத்துக்கு ராஜசேகர் எழுதியுள்ள கடிதத்தில், “நான் தமிழகத்தில் தமிழ்ப் பேசும் பகுதியில் உள்ளேன். அஞ்சலகத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற புது விதி வந்துள்ளதை அறிந்தேன். எனது தமிழை புறக்கணிக்கும் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே தங்களுடைய அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு மற்றும் ஐ.பி.பி.பி. கணக்கை முடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் சமூக ஊடங்களில் வைரல் ஆகிவருகிறது. ராஜசேகரின் இந்த முடிவு பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.