Ariyalur Student Suicide: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை.
மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திரு இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில் மதம் சார்பாக புகார் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும் இதை விடுவதாக இல்லை பாஜக. இந்நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதப்பரப்புரை எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;- முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார். ஜனவரி 10-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.