அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்க... கருத்தரங்கில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வேதனை..!
அதுவும், தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஒருவர் ஆண்டு கொண்டு இருக்கிறார் என ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இன்று துவங்கிய கருத்தரங்கில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இத்துடன் மகாகவி பாரதியார் படத்தை திறந்து வேத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து மாணர்களிடையே பேசினார்.
ஒருமையில் பேசிய நபர்:
அப்போது "இணையத்தில் ஒருவர் என்னை பற்றி பேசுகிறார். இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள். இரண்டு மாநிலத்துக்கு கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான காரியம். அதுவும், தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஒருவர் ஆண்டு கொண்டு இருக்கிறார் என ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும். துர்திர்ஷ்டவசமாக அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசி இருக்கிறார். யாரையாவது திட்டுவதாக இருந்தால் தயவு செய்து அழகு தமிழ் மரியாதையுடன் திட்டுங்கள். என் தமிழுக்கு மரியாதை உண்டு. மரியாதை இல்லை என்றால் நீங்கள் தமிழரே கிடையாது," என கூறினார்.
பெருமை:
தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் மகாகவி பாரதியாரின் எழுத்து ஆளுமை, பெண்கள் தனித்துவம் பெற்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற மகாகவியின் நோக்கம் பற்றி பேசினார். பாரதியார் பல மொழிகளை கற்றுக் கொண்ட போதும், தமிழ் மொழி தான் மற்ற மொழிகளுக்கு எல்லாம் முதன்மையானது என கூறி இருக்கிறார்.
அனைவரும் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதோடு உலகிற்கே முதன்மையான மொழியாக இருக்கும் தமிழை கற்க நாம் பெருமை கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். இத்துடன் தமிழ் மொழி இனிமையை மேம்படுத்தி வருவதற்கு தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கில் பங்கேற்க வந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மரக் கன்றையும் நட்டு வைத்தார்.