ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறை சேர்ந்தவர் புலவர் க.மீனாட்சி சுந்தரம் (90) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர். தமிழக மேலவையிலும் திமுக சார்பில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு வீட்டில் இருக்கும் போது திடீரென மீனாட்சி சுந்தரத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜாக்டோ-ஜியோவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மறைந்த மீனாட்சி சுந்தரம் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது 2013 ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். பழங்கால, இடைக்கால இலக்கியங்கள் குறித்து இவர் வழங்கிய பங்களிப்புகள், திருக்குறள் பற்றிய இவருடைய கட்டுரைகள், கம்பர் பற்றிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.