வனத்துறைக்கு போக்கு காட்டும் சிறுத்தை... மயிலாடுதுறையில் டூ தஞ்சாவூருக்கு தப்பிவிட்டதா.? பொதுமக்கள் அச்சம்
மயிலாடுதுறை பகுதியில் கடந்த ஒரு வாராமாக சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல இடங்களில் கூண்டு வைத்துள்ள நிலையில், சிறுத்தை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் நடமாட்டம் இருந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தை
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. அடந்த காடுகள் இல்லாத மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை வந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்தது.மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1,000 ஹெக்டேர் காப்புக்காடுகள் இருந்தாலும், கடந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் எங்கும் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக தகவல் இல்லை. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் சார்பாக பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 7 நாட்களாக சிறுத்தை கூண்டில் அகப்படாமல் போக்குகாட்டி வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலத்தை அடுத்த காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்து தீவிர தேடுதல் வேட்டையை அப்பகுதியில் மேற்கொண்டுள்ளனர் .
தஞ்சாவூருக்கு தப்பி சென்றதா.?
மொத்தம் 16 குண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 கூண்டுகள் காஞ்சிவாய் பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில் சிறுத்தை சிக்கவில்லை , மேலும் தானியங்கி கேமராக்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சோதனை செய்தது அப்பகுதியில் உள்ள கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. இதனிடையே மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை தஞ்சாவூர் மாவட்ட பகுதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கம் போலீஸ்
இதனிடையே சிறுத்தை தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்யான தகவல்கள் பரபரப்படுவதாகவும், இது போன்ற பொய் தகவல்களை பரப்புகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறுத்தை தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்