தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் இன்று எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் இருக்கும் திருவாடுதுறை ஆதினம் மேல்நிலையப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பணியில் உள்ளனர். அவர்களுடன் தஞ்சாவூரைச் சேர்ந்த தென்றல்குமார் (48) என்பவரும் பணியில் இருந்தார். இவர் ஆடுதுறையில் இருக்கும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வாக்கு எண்ணும் பணிக்கு வந்த தென்றல் குமார் மதுபோதையில் இருந்துள்ளார். இதுகுறித்து சக பணியாளர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். காவலர்கள் அவரை பிடித்து விசாரணை செய்ததில் குடித்துவிட்டு வந்ததுடன் மது பாட்டிலையும் அவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவருக்கான தேர்தல் பணி ஆணை ரத்து செய்யப்பட்டது. பின் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.