கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், அரசு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. 

இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும்,  அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ததில் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் வரை 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்ட கொட்டியப்படுகை கிராம ஊர் எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபர்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.