இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று 25 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் ஒருவர் கொரோனவால் பலியாகி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் சுற்றி திரியாமல் ஒன்றாக சேராமல் வீடுகளில் முடங்கி இருக்குமாறு அரசு அறிவித்திருக்கிறது.

எனினும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் வாகனங்களில் சுற்றித் திரிந்தும் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடி வருவதையும் காண முடிகிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி கறிவிருந்து நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே இருக்கும் தியாக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு(29). திருப்பூரில் பணியாற்றி வந்த இவர் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஊருக்கு திரும்பியிருக்கிறார். இதையடுத்து அங்கு இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து தான் ஊருக்கு திரும்பியதை கொண்டாடும் விதமாக கறி விருந்து நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

food

இதற்காக கடந்த புதன்கிழமை பிரம்மாண்டமான சமையல் செய்து இளைஞர்கள், சிறுவர்கள் என வரிசையாக எதிரெதிரே அமர்ந்து கறி சோறு அருந்தி இருக்கின்றனர். இந்த காட்சிகளை சமூக வலைதளமான முகநூலில் நேரலையும் செய்துள்ளனர். அதில் பேசிய நபர் தற்போது தங்கள் கிராமத்தில் கொரோனா கொண்டாட்டதிற்காக கறி விருந்து  நடப்பதாக கூறியிருக்கிறார். இந்த காணொளி வைரலாக கபிஸ்தலம் காவல்துறையினர் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த சிவகுரு என்கிற இளைஞரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.